• நாட்டிலுள்ள முதற்தர வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), முக்கியமான சேவையை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க அரசுக்கு அழைப்பு விடுக்கின்றது.
• மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும், 15% வேலைவாய்ப்புக்கும் சில்லறை வணிகத்துறை பங்களிக்கிறது.
• விவசாயிகள், விநியோகஸ்தர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விநியோக பணியாளர்களை உள்ளடக்கிய பரந்த கட்டமைப்புக்கு இத்துறை ஆதரவளிக்கின்றது.
• பொருத்தமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் அவசர ஆதரவைக் கோருகிறது.
தேசிய ரீதியான முடக்கல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது ஒத்துழைப்பும், கலந்தாய்வுடன் கூடிய அணுகுமுறைக்கும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA) அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக குறுகிய கால அறிவிப்புடன் கூடிய தற்காலிக நடவடிக்கைகளால் இத்துறையானது பல மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் அதேவேளை, கோவிட் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவது சில்லறை வணிகத் துறையின் தொடர்ச்சியான செயற்பாட்டை பாதிக்கக்கூடாது என்று SLRA வலியுறுத்துகிறது.
SLRA என்பது இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை துறையில் (ORS) ஒரு செல்வாக்கு மிக்க குழுவாகும். இது இறுதி சில்லறை வணிகங்களான FMCG விற்பனையாளர்கள், சுப்பர்மார்க்கெட்கள், ஆடை, பெஷன் மற்றும் நகைகள், வீட்டு உபயோக மற்றும் நுகர்வோர் பொருட்கள், காலணி மற்றும் துணைப் பொருட்கள், இலத்திரனியல் வணிகம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனையாளர்கள் மற்றும் தங்குமிடம் மற்றும் வதிவிட வசதி வழங்குநர்கள் போன்றோரை உள்ளடக்குகின்றது.
இலங்கை சந்தை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கல் ஆகியவற்றில் ஒருமித்த குரலாக ORS குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டில் 15% இற்கும் அதிகமான வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. சில்லறை வணிகத் துறையின் பெறுமதிச் சங்கிலிகளின் சொட்டுப் பயன் விளைவுகள் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் சிறிய நடுத்தர வணிக விநியோகஸ்தர்கள் போன்ற விநியோகச் சங்கிலிகளின் அடிமட்டத்திற்கும் விரிவடைவதால், இலங்கை பொருளாதாரத்தின் வலுவான தன்மைக்கு துடிப்பான சில்லறை வணிகம் ஒரு முக்கிய அங்கமாகும்.
இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ஜூன் 25 அன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு இணைய வெபினாரின் போது, ORS என்பது வெறும் துணைத் துறை அல்ல, மாறாக நாட்டில் அதன் சொந்த முழுமையான கட்டமைப்பென்பதுடன், பல துணை பொருளாதார சமுதாயப் படிநிலைகளையும் சென்றடைவது மட்டுமன்றி நாட்டின் சமூக-பொருளாதார அடித்தளத்தையும் பாதிப்பதாக SLRAவின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
SLRA வின் ஸ்தாபகர் / தலைவர் ஹுசைன் சித்திக், சில்லறை வணிகத்துறை கட்டமைப்பு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “நவீன சில்லறை வணிகமானது இலங்கையில் தொடரவுள்ளது. சில்லறை வணிகத்துறையானது இலங்கை பொருளாதாரத்திற்கு பல பில்லியன்களை பங்களிப்பு செய்வதுடன், சுமார் ஒரு மில்லியன் நேரடி வேலை வாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதுடன், இன்னும் பலவற்றுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றது. இந்தத் துறை இலங்கையில் இளைஞர் வேலைவாய்ப்புக்கான ஒரு பிரதான அமைப்பென்பதுடன் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையையும் நிவர்த்தி செய்ய உதவுகிறது. கோவிட் – 19 நெருக்கடி நிலையில் முன் வரிசையில் உள்ள முக்கிய துறைகளில் ஒன்றாகும். மேலும், நாடு முடக்கப்பட்ட போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவின் கடைசி விநியோக சுமையை ORS தனது தோள்களில் சுமக்கிறது. ORS இன் பொருளாதார முக்கியத்துவம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான தொடுபுள்ளி அமைப்பாக இருப்பது மட்டுமல்ல, B2B மட்டத்திலும் அதன் தாக்கம் உள்ளது. வருடந்தோறும் ORS, புதிய உட்கட்டமைப்பிற்காக பல பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்வதுடன், இலங்கை ரியல் எஸ்டேட் வணிகத்தின் முக்கிய வருமானமாக உள்ள உயர் தரமான சில்லறை வணிக கட்டிடங்களுக்கான குறிப்பிடத்தக்க அளவிலான வாடகைக் கட்டணங்களையும் செலுத்துகிறது. எனவே, ORS க்கு அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்பட வேண்டிய நேரம் இதுவாகும். இப்போது இந்தத் துறையைப் பாதுகாக்க முதலீடு செய்வதன் மூலம், மிக மோசமான சமூக விளைவுகள் பின்னர் தவிர்க்கப்படும் ”என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் ஒன்றாக ஆதரவு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இது ORS இற்கு நெருக்கடியின் மோசமான நிலையில் பொருளாதார மீட்சிக்கு ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உதவும். ORS ஐ கலந்தாலோசிக்காமல் அமுல்படுத்தப்படும் முடக்கல் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. கோவிட் முடக்கலின் போது வேறு எந்த நாடும் சில்லறை வணிக அமைப்புகள் மற்றும் சுப்பர்மார்க்கெட்டுக்களை மூடுவதில்லை, மாறாக தனிநபர் தொலைவு போன்ற கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்துகின்றன. கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்படும் முடக்கல் தொடர்பான அறிவிப்புகள் காரணமாக, ORS இல் உள்ள அழிந்துபோகக்கூடிய கையிருப்புகள் ஒரே இரவில் அழிவதுடன் பல மில்லியன் ரூபாய் இழப்புகளுடன், விநியோகஸ்தர்களையும் பாதிக்கின்றது. அதே நேரத்தில் சில்லறை வணிகங்களின் பணியாளர்களை தக்கவைத்தலும், விலகிச் செல்லலும் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளன. அதிகமான நுகர்வோர் வீடுகளில் தங்கியிருப்பதாலும், வேலை செய்வதாலும் சில்லறை வணிகத்தின் துணை துறைகளான ‘நுகர்வோர் பொருட்கள்’ போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது, முடக்கல் நிலையினால் ORS உடன் கலந்தாலோசிக்காதது அவர்களின் விநியோகங்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, நுகர்வோர் பொருட்களின் விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கும் இன்றியமையாதது. ORS உடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டால் இவை அனைத்தும் சிறப்பாக செயல்படும்,” என சாதிக் மேலும் தெரிவித்தார்.
முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுடன் முடக்கல் காலங்களிலும் சில்லறை வணிகங்களை இயங்க அனுமதிப்பதானது, நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்குமென்பதுடன், இல்லையெனில் அவர்களின் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என SLRA பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். தற்காலிக முடக்கல்கள் நிலைகள் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவற்றிலிருந்தான பெரும் நிதி இழப்பிலிருந்து மீண்டு வர, ORS அரசாங்கத்தை VATஐக் குறைக்கவும், மின்சாரம் போன்ற பொதுப்பயன்பாட்டு கட்டணங்களைக் குறைக்கவும் கோரிக்கை விடுக்கின்றது. இது இக்கட்டான நிலையில் உள்ள சில்லறை வணிகங்களுக்கு பெரிதும் உதவுமென்பதுடன், இது செலவின் நன்மைகளை பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றவும் உதவும். சில்லறை வணிகங்களின் வியாபாரக் கடன்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நீட்டிப்பு இந்தத் துறையின் விரைவான மீட்சிக்கு முக்கியமானதாக இருக்கும். மேலும், ORS இன் ஊழியர்களும் கோவிட் – 19 இன் முன்களத்தில் போராடுவதால், அவர்கள் கடுமையான உடல்நல அபாயங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை ORS நினைவூட்டுவதுடன், கோவிட் – 19 தடுப்பூசியைப் பெற அவசர வேண்டுகோள் விடுக்கின்றது. இந்த நடவடிக்கைகளை விரைவாக செயற்படுத்துவதானது இலங்கையில் ORS இன் சீரான செயல்பாட்டை புதுப்பிக்க உதவுவதுடன், உள்ளூர் சந்தையை சீர்குலைத்து வரும் விநியோகம் மற்றும் விலையேற்ற அழுத்தங்களை எளிதாக்கும்.