Dronetech மற்றும் Huawei ஆகிய இரண்டு நிறுவனங்களும், 1323 ஆம் ஆண்டுக்குரிய ஆவணமொன்றில் முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருந்த, மேல் ஒஸ்திரியாவில் உள்ள, பல நூற்றாண்டுகள் பழமையான தோட்டமான Nussböckgut திராட்சைத் தோட்டத்தில், கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கள் முன்னோடித் திட்டம் தொடர்பான முன்னேற்றத்தை அறிவித்திருந்தன. அத்துடன் தமது 5G மற்றும் IoT தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் நிலைபேறான தன்மையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தன. இந்த இரு நிறுவனங்களும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விவசாயம் தொடர்பான நிபுணர்கள் அடங்கிய குழுவின் மூலம், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், குறிப்பாக 5G எவ்வாறு நிலைபேறான விவசாயத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை விவாதித்ததோடு, அதனை தொகுத்தும் வழங்கியிருந்தன,
தமது ஒத்துழைப்பானது, ‘Digital Sky’ எனப்படும் இரண்டாம் கட்டத்திற்கு நுழைவதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 5G இற்கு மேலதிகமாக cloud computing சேவைகளை Huawei வழங்கும். இது நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு (AI) பகுப்பாய்வுக்கான அடித்தளமாக செயல்படும். இதேவேளை, உயர் தெளிவுத்திறன் கொண்ட கெமராக்கள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்ட, Dronetech நிறுவனத்தின் ட்ரோன்கள், நிலம் மற்றும் பொருட்களை ஆய்வு செய்து, AI மூலம் செயலாக்கப்படும் படங்களையும் தரவையும் பெற்று, பயனர்களுக்கு உடனடியாக செயற்படுத்தக்கூடிய கண்டறிந்த விடயங்களை வழங்கும்.
இந்த தொழில்நுட்பமானது, விவசாயிகளுக்கு சிறு பூச்சிகளைக் கண்டறியவும், பயிரின் நிலையைக் கண்காணிக்கவும், அறுவடைகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம், குறைந்தபட்ச விரயத்துடன் நீர், இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை துல்லியமாகவும் பயன்படுத்த உதவுகிறது.
இரண்டாவது கட்டத்தின் போது, ட்ரோன் சேவைகளுக்கான பகிரப்பட்ட பொருளாதார அணுகுமுறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சூரிய மின்கல தொகுதிகளை ஆய்வு செய்தல், போக்குவரத்து முகாமைத்துவம் அல்லது மின் கம்பிகள் தேய்ந்து போவதைக் கண்டறிதல் போன்ற பரந்த அளவிலான பயன்பாடுகளுக்காக, விவசாயிகள், உள்ளூராட்சி சபைகள், பெரு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனர்கள், ட்ரோன்களையும் அவற்றின் AI தீர்வுகளையும் வாடகைக்கு பெற முடியும்.
விவசாயத்திற்கு 5G மூலம் இயக்கப்படும் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதிலான மிகப் பாரிய சவால், குறித்த பகுதியிலுள்ள வலையமைப்பு பரவலடைந்துள்ள நிலையாகும். தற்போது, 5G வலையமைப்புகள் பிரதானமாக அடிப்படை மட்டத்தில் அல்லது உள்ளக மட்டத்தில் உள்ள இறுதிப் பயனருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தரையில் இருந்து 50 மீற்றர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களுக்கான உயர்தர வலையமைப்பு பரவலானது, இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
https://www.huawei.com/en/sustainability/the-latest/events/5g-smart-farming-tour