– Huawei நிறுவுனர் ரென் ஷெங்பே
உலகளாவிய முன்னணி தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகளின் வழங்குநரான Huawei, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் உள்ளதுடன், இந்த 5G சகாப்தத்தில் முக்கிய குறிக்கோள், பல்வேறு தொழிற்துறைகளில் 5G தொடர்பான இசைவாக்கத்தை அதிகரிப்பதாகும் என, அந்நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) ரென் ஷெங்பே அண்மையில் தெரிவித்திருந்தார்.
“எமது முந்தைய தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பானது, பெருமளவான வீடுகள் மற்றும் பல பில்லியன் மக்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆயினும் தற்போதைய 5G சகாப்தத்தில், வணிகங்களை இணைப்பதே பிரதான குறிக்கோளாகும்” என தெரிவித்த, Huawei நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ரென் ஷெங்பே, வெவ்வேறு தொழிற்துறைகளில் இலத்திரனியல், மென்பொருள், கணனி அமைப்புகளுக்கு ஏற்றவாறான இசைவாக்கத்தை அதிகரிப்பதே தமது நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்தார்.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் தையுவானில் உள்ள Intelligent Mining Innovation Lab திறப்பு விழாவில் பங்கேற்ற அவரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது, Huawei நிறுவனத்தின் எதிர்கால நோக்கு மற்றும் 5G சகாப்தத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
“விமான நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கம், இரும்பு, உருக்கு உற்பத்தி, வாகன உற்பத்தி, விமான உற்பத்தி போன்ற பல தொழில் துறைகள் தொடர்பில் எமக்கு அவ்வளவு பரீட்சயம் இல்லை. அதனால்தான் இந்தத் தொழில்துறைகளின் தேவைகளைப் பற்றி மேலும் அறிய கூட்டு ஆய்வகங்களை நாங்கள் நிர்மாணித்திருக்கின்றோம்” என்று ரென் சுட்டிக்காட்டினார்.
“உங்களுக்கு நேரம் இருந்தால், நீங்கள் நிங்போ துறைமுகம், ஷென்சென் விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையம், ஜேர்மனியில் உள்ள வாகன தொழிற்சாலைகள் போன்றவற்றைப் பார்வையிட வேண்டும். அவை எமது 5G சேவைகளைப் பயன்படுத்துகின்றன. அவை எவ்வாறு முன்னேற நாங்கள் உதவுகிறோம் என்பதை நீங்களே பார்த்து அறிய முடியும். நாங்கள் இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்களிடமிருந்து நம்பிக்கையை வென்று வருகிறோம்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவரைப் பொறுத்தவரை வெவ்வேறு தொழிற்துறைகளுக்கான 5G பயன்பாடுகள் வேறுபட்டவையாக உள்ளபோதிலும பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ஒரே மாதிரியானவை. நிலக்கரி சுரங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய நுண்ணறி மூலம், Huawei நிறுவனத்தின் இலத்திரனியல் மற்றும் மென்பொருள் அமைப்புகள் மூலம் சுரங்கங்களுக்கு சிறந்த செயலிகளையும், சேவைகளையும் வழங்க முடியும் என, ரென் சுட்டிக்காட்டினார். ரென் வழங்கிய விளக்கத்திற்கு அமைய, 5G பயன்பாடுகளுக்கு வரும்போது, பெரும்பாலான ICT (தகவல் தொடர்பாடல்) நிறுவனங்கள் சுரங்கங்களை, சந்தை முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு துறையாக கருதுவதில்லை. ஆனால் Huawei அதனை செய்து காட்டியுள்ளது. சீனாவில் சுமார் 5,300 நிலக்கரி சுரங்கங்களும் 2,700 கனிய சுரங்கங்களும் காணப்படுகின்றன.
இந்த புதிய ICT தீர்வுகள் மூலம் இந்த 8,000 இற்கும் அதிகமான சுரங்கங்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்க Huawei எதிர்பார்ப்பதோடு, சீனாவுக்கு வெளியே உள்ள சுரங்கங்களுக்கான சேவைகளையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.
“நிலக்கரி சுரங்கங்களுக்கு எங்களால் சிறந்த சேவைகளை வழங்க முடிந்தால், நாங்கள் மிகச் சிறந்த சேவை அமைப்பொன்றை உருவாக்கியிருப்போம். நிலக்கரித் தொழில்துறையில் மனித வளத்தை குறைத்து, ஆளில்லா நடவடிக்கைகளை அதிகரித்து, அதில் அவர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் அதனை திறன்படச் செய்தல் ஆகிய விடயங்களில் உதவுவதே எமது பங்களிப்பாகும்” என ரென் விளக்கினார்.
முழுமையான இயந்திரமயமாக்கப்பட்டதும் நுண்ணறிவு மிக்க சுரங்க அமைப்புகளில், பணியாளர்களை 60% ஆக குறைக்க உதவுவதன் மூலமும், சுரங்க குழிகளுக்குள் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு ஷிப்டிலும் 10% முதல் 20% வரை குறைக்க உதவுவதன் மூலம் Huaweiயினால இதை மேற்கொள்ள முடியும்.
ஷாங்க்சியில் உள்ள Intelligent Mining Innovation Lab ஆய்வுகூடமானது, 5G கொண்ட சுரங்கங்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும். இந்த ஆய்வகத்தில் 220 நிபுணர்கள் பணியாற்றுவதோடு, அவர்களில் 53 பேர் Huawei நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாவர். இதில் பெரும்பலான Huawei நிபுணர்கள், இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாவர். இந்தத் தொழில்துறை குறித்தான, விரிவான அறிவைக் கொண்ட ஷாங்க்சியைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட நிலக்கரிச் சுரங்க வல்லுநர்களும் இதில் காணப்படுகின்றனர்.
Nanniwan எனும் ஒரு திட்டத்தை Huawei ஆரம்பித்துள்ளதாக ரென் விளக்கினார். இது, உற்பத்தியில் தன்னம்பிக்கை என்ற எண்ணக்கருவை கொண்டது. நிலக்கரிச் சுரங்கம், இரும்பு, உருக்கு மட்டுமல்லாது இசை, தொலைக்காட்சிகள், கணனிகள் மற்றும் டெப்லெட்டுகள் போன்ற தயாரிப்பு வகைகளிலும், Huawei ஆனது முன்னேற்றம் காண இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
பேர்லின், மியூனிக், மெட்ரிட், சூரிச், ஜெனீவா, ஆம்ஸ்டர்டாம், வியன்னா, பார்சிலோனா, சியோல், பெங்கொக், ஹொங்கொங், ரியாத் உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் சிறந்த 5G வலையமைப்புகளை உருவாக்க Huawei உதவியுள்ளது என்று தெரிவித்த அவர் ஐரோப்பாவிலுள்ள தமது நிறுவனத்தின் வலையமைப்புகளில் உலகளாவிய வலையமைப்பு செயல்திறன் சோதனைகளில் மிகச் சிறந்ததாக விளங்குவதாக சுட்டிக்காட்டினார்.
Huawei ஆனது, உலகெங்கிலும் 100 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கூட்டு ஆய்வகங்களையும் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை கணிதம், பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், அழகியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவையாக காணப்படுகின்றன. அவற்றில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவை, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் Huawei கட்டியெழுப்பப்பட்ட பயன்பாட்டு ஆய்வகங்களாக காணப்படுகின்றன. அதாவது டெலிகொம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறியும் வகையிலான தொலைபேசி சேவை கூட்டு ஆய்வகங்கள் போன்றவையாகும். ரென் தெரிவித்த கருத்துக்கு அமைய, Huawei ஆனது தொலைத் தொடர்பு விடயங்களுக்கு அப்பால் சென்று, நிலக்கரிச் சுரங்கம் மற்றும் இவ்வாறான கூட்டு ஆய்வகம் மூலமான, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற தொழில்துறைகளுக்கான போக்குவரத்து பயன்பாடுகள் தொடர்பான விடயங்களுக்கான ஆய்வகங்கள் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகும்.
Huawei நிறுவனத்தின் விற்பனை மூலமான வருமானம் மற்றும் இலாபங்கள் என்பன, இவ்வாண்டில் சாதகமான வளர்ச்சியை அடைந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். “Huawei இனது நிலைத்து நிற்கும் தன்மையில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, ஏனெனில் சிரமங்களை சமாளிப்பதற்கான அதிக தீர்வுகள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்” என ரென் சுட்டிக்காட்டினார். 2020 ஆம் ஆண்டில் Huawei விற்பனை வருமானம் மற்றும் இலாபம் என்பன அதற்கு முந்தைய வருடத்திலும் பார்க்க அதிகமாகும்.