கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிலவும் முடக்கல் நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT) , சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களை இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த தற்போது தொடர்ச்சியாக நடாத்தி வரும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) பாடத்திற்கான ஒன்லைன் உதவிக் கருத்தரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நிலையானது நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளமையால், இவ்வருடம் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவர்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். பாடசாலை தவணைக் காலம் திடீரென குறைக்கப்பட்டதுடன், அவர்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டதால் பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் போனது. தேசத்தின் இளம் சமூகத்திற்கு உதவ எப்போதும் தயாராக இருக்கும் ஒரு பொறுப்பான அமைப்பென்ற வகையில் IIT, இம் மாணவர்கள் தங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கையைத் தொடர்வதற்கு உதவ முன் வந்தது. IIT தனது ஐ.சி.டி நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு, ஐ.சி.டி பாடத்துக்கான தொடர்ச்சியான பயனுள்ள ஒன்லைன் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது.
IIT பல ஆண்டுகளாக இந்த உதவிக் கருத்தரங்குகளை சீராக நடத்தி வருவதுடன், நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் கணிசமாக பயனடைகிறார்கள். தற்போதைய முடக்கல் நிலையினால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஐ.சி.டி பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான சிறந்த தளத்தை இது வழங்குகின்றது. இதன் மூலம் அவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை எவ்வித தடையுமின்றி தொடர்வதற்கும், முறையே அவர்களின் ஐ.சி.டி பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு மிக அவசியமான ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்த இரண்டு மணித்தியால கருத்தரங்கானது இணைய உலகம் (IoT), புரோகிராமிங், செயல்வழிப் படம் உட்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது. இவை IIT யின் மிகவும் அனுபவம் வாய்ந்த கல்வி சார்ந்த உறுப்பினரால் நடாத்தப்படுவதுடன், இது இரண்டு வகைப்படும். முதல் வகையானது, ஒரு பாடசாலையானது தனது ஐ.சி.டி பாடத்திட்டத்தின் தேவைகளின் அடிப்படையில் முன்வைக்கும் தலைப்பின் கீழ் பார்வையாளர்களுக்கு கற்பிப்பதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் ஒரு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் சராசரியாக இவ் வகையான கருத்தரங்குகளில் பங்கேற்கிறார்கள். இரண்டாவது வகை, ஒரு பொதுக் கருத்தரங்காகும். இது பல்வேறு வகையான ஐ.சி.டி தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமானதாகும். இந்த ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, IIT இன் பணிப்பாளர் , பேராசிரியர் ஜயந்த விஜேரத்ன, “இது முழு நாட்டுக்கும் சிக்கலான நேரமென்பதுடன், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலாவது உதவுவதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியம். கொவிட்-19 நோயிலிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பாடசாலைகளை மூடியமையானது ஒரு முக்கியமான படியாகும். எனினும், அது அவர்களின் கல்விக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையில், IIT இனால் சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஒன்லைன் ஐ.சி.டி. உதவிக் கருத்தரங்குகளை வழங்குவதற்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் நாம் கொண்டுள்ள அனுபவத்தையும், அறிவையும் பயன்படுத்துவதன் மூலம் உதவ முடியும் என்பதை இனங்கண்டு கொண்டோம். எமது சொந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பொருட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எம்முடன் இணைந்து கொண்ட மாணவர்களிடையே, நாங்கள் இதுவரை நடாத்திய கருத்தரங்குகள் மிகவும் வெற்றியளித்துள்ளமையை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கருத்தரங்குகளைத் தொடர நாங்கள் நம்பிக்கையோடு உள்ளதோடு, வரவிருக்கும் பரீட்சைகளில் இந்த மாணவர்கள் சிறப்பாக செயல்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்றார்.
பேராசிரியர் விஜேரத்ன, மேலும் தெரிவிக்கையில்,” இந்த நோயால் ஏற்பட்டுள்ள பாரிய சவால்களை வெல்வதற்கு, அதிகாரிகளால் மிகவும் விளக்கமாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். நாம் வீட்டில் இருக்க வேண்டும், தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும், சமூக தொலைவைப் பேண வேண்டும். ஒழுக்கமாக இருப்பதுடன், கவனமாக இந்த அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், இந்த நோயை வென்று, இறுதியில் முன்னரை விட வலுவாகவும், தேசமாக ஒன்றிணைந்தும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்”, எனக் குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரமுடைய பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் இலங்கையின் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster மற்றும் Robert Gordon ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரியான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் விருது பெற்ற கல்வி நிறுவனமாக IIT திகழ்கிறது. IIT ஆனது, உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் வாயிலாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, IIT 3,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதுடன், தற்போது 25 நாடுகளை தளமாகக் கொண்டுள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவ துறையிலான வல்லுனர்களாகத் திகழ்வதுடன், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புளுசிப் கம்பனிகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பதன் வாயிலாக குறித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
IIT இன் ஒன்லைன் உதவி கருத்தரங்குகள் தொடர்பிலும், பாடசாலைகள் எவ்வாறு தம்மை பதிவு செய்து கொள்வது என்பது தொடர்பிலும் மேலதிக தகவல்களை IIT இன் பேஸ்புக் பக்கத்தின் https://www.facebook.com/iitsl ஊடாக எம்மை தொடர்புகொள்வதன் மூலமாகவும் அல்லது 0766 760 760 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.